பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க முயற்சி.. காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வலை.!

By Asianet TamilFirst Published Sep 8, 2021, 9:16 AM IST
Highlights

மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் பிறந்த நாள் விழாவையொட்டி மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இறங்கியுள்ளார். 
 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே கூடிப் பேசத் தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 18 கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது முன்னாள் துணை பிரதமரும் இந்திய தேசிய லோக் தள  நிறுவனமருமான மறைந்த தேவிலால் பிறந்த தினம் செப்டம்பர் 25-இல் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை பிரமாண்டமாகவும் கட்சிகளை ஒன்று திரட்டும் விழாவாகவும் நடத்த தேவிலால் மகனும், அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு சவுதாலா அழைப்பு விடுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சிரோமணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேசிய லோக்தள கட்சித் தலைவர் அபய் சவுதாலா கூறுகையில், ''பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றை நாட்டு மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேவிலால் பிறந்த நாள் விழாவில், அதற்கான விதை தூவப்படும். இந்த அணி மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசும்” என்று தெரிவித்துள்ளார். 

click me!