
குஜராத் மாநிலத்தில் திடீர் எழுச்சி நாயகனாக அடையாளம் காணப்பட்ட ஹர்த்திக் பட்டேலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அங்கே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்டேல் இனத் தலைவராக, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு அடையாளம் காணப்பட்டவர் ஹர்த்திக் பட்டேல் என்ற இளைஞர். கடந்த 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க., எம்.எல்.ஏ., அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் ஹர்த்திக் பட்டேலை கைது செய்ய குஜராத் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் என்பது கவனிக்கத் தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ஹர்த்திக் பட்டேல் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் காங்கிரஸ் பக்கம் போகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப, ஹர்த்திக் பட்டேல் ஆதரவாளர் தம்மை பாஜக., பக்கம் இழுப்பதற்கு பேரம் பேசியதாகவும் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், குஜராத் தேர்தல் களத்தில் ஹர்த்திக் பட்டேல் முக்கியப் பங்காற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று இன்று வெளியான கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தியை சந்தித்த இரண்டு நாட்களில் ஹர்த்திக் படேலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல் மட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது