முத்தலாக்கால் அவையை முடக்கி நிறைவேறாமல் செய்தவர்களுக்கு... இஸ்லாமியப் பெண்கள் கடும் எதிர்ப்பு!

First Published Jan 5, 2018, 5:00 PM IST
Highlights
No Triple Talaq Bill As Parliaments Winter Session Ends


இஸ்லாமியர்களிடையே இருக்கும் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் அவையை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

‘முத்தலாக்’ சட்ட விரோதம் என்று கூறி தடை செய்தும், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஆண்களுக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்தும் மத்திய அரசு ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ என்ற பெயரில் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மத்திய அரசு பெரும்பான்மை பலம் கொண்டிருந்த மக்களவையில் நிறைவேற்றி அனுப்பியது. 

இருப்பினும், ஆளும் பாஜக.,வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால், இந்த சட்ட மசோதா நிறைவேறுவதில் பிரச்னைகள் எழுந்தன. இருப்பினும்,  மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட போது,  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, அவையில் அமளி நிலவியது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, நாள் முழுவதும் அவை அன்று ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் நேற்று இரண்டாவது நாளாக இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். மேலும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். ஆனால்  நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் 24 மணி நேரத்துக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இந்த மசோதாவுக்கு எதிராக இருப்பவர்கள் தேர்வுக் குழுவில் இடம் பெற இயலாது என்று கூறினார். மேலும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரிலேயே மத்திய அரசு சட்ட வடிவாக்கத்துக்கு முயற்சி எடுத்தது என்றும், இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இது அவசியம் நிறைவேற்றப் படவேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். நீதிமன்றம் கொடுத்த ஆறு மாத கால அவகாசம் நெருங்கி விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. 

அருண் ஜேட்லியின் பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளி நீடித்ததால் நேற்றும் அவை இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதனிடையே, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என தகவல்கள் வெளியானது.  

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இறுதி நாளான இன்றும் இம்மசோதா விவகாரம் முடிவுக்கு வராது என கூறப்பட்டது. அவ்வாறே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதால், இந்த மசோதா இந்த முறை நிறைவேற்றப்படாமல் போனது. 

இதை அடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே, பெண்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இனி காங்கிரஸைப் புறக்கணிப்போம் என்று ஒருமித்துக் கூறினர். இந்த மசோதாவைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். அதே நேரம், இதை நிறைவேற்ற விடாமல் தடுத்த காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என்று முழங்கினர். 

click me!