
Jammu Army Camp Attack Report False News : இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாகிஸ்தான் அதனை மீறியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எஃப் துணை ஆய்வாளர் முகமது இம்தியாஸ் வீரமரணம் அடைந்ததை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உறுதிப்படுத்தியது.
இதே போன்று நக்ரோட்டா பகுதியிலும் தாக்குதல் நடந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தான் அந்த செய்தி தவறானது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஏஎன்ஐ செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்முவில் உள்ள நக்ரோட்டா ராணுவ முகாமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததாக வெளியான செய்தி தவறானது. செய்தியைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, செய்தி நிறுவனமான ANI மன்னிப்பு தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் கூறியது போல் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என்றும், ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் மத்திய செய்தித் துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
தேசிய ஊடகங்கள் உட்பட பல ஊடகங்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பின்னரே, செய்தி தவறானது என்ற விளக்கம் பாதுகாப்புப் படைகளிடமிருந்து வந்தது. ஜம்முவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் நக்ரோட்டா ராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்கே விமானப்படையின் முகாமும் செயல்பட்டு வருகிறது.