
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பையடுத்து மக்கள் கடும் பணப்பற்றாக்குறையால் திண்டாடி வரும் நிலையில், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள், சேவைகள் பெறும் போது, டிசம்பர் 31-ந் தேதி வரை சேவைக்கட்டணம் மக்களிடம் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
அறிவிப்பால் சிரமம்
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் கடந்த 8-ந்தேதி பிரதமர் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்து அறிவித்தார். அதன்பின், மக்கள் வங்கிகளில், தபால் நிலையங்களிலும்பணம் எடுக்க கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
மக்களின் சிரமங்களைப் போக்கவும், ஒவ்வொரு நாளும் புதிய புதிய சலுகைகளையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இருந்தும், ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் போதிய பணம் இருப்பு இல்லாததால் மக்கள் கடும் அன்றாடச் செலவுக்கு திண்டாடி வருகின்றனர்.
கட்டணம் ரத்து
இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்த தாஸ் நேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது-
மக்களிடம் டிஜிட்டல் பேமண்ட் சேவையை ஊக்கப்படுத்தும் வகையில், டெபிட், கிரெடிட் கார்டு பரிமாற்றங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறது. இதற்காக வரும் டிசம்பர் 31-ந்தேதி வரை, டெபிட் கார்டுகள் முலம் மக்கள் பொருட்கள், சேவைகள் வாங்கும் போது விதிக்கப்படும் சேவைக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
மத்தியஅரசின் திட்டத்துக்கு சில தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை வங்கிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. ரூபே கார்டு ஏற்கனவே கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டது. சர்வதேச நிறுவனங்கள் மட்டுமே, தற்போது பரிமாற்ற கட்டணம் மட்டுமே வசூலிக்கின்றன.
ரூ.20 ஆயிரம் அனுமதி
இ.வாலட்டில் இதற்கு முன் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வரை டெபாசிட் செய்து செலவு செய்யவே அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி ரூ. 20 ஆயிரம் வரை இ-வாலட்டில் டெபாசிட் செய்து மக்கள் செலவு செய்யலாம்.
மின்னனு பரிமாற்றம்
மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் தங்களின் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்கும் போது ரொக்கமாக வழங்காமல், அதை மின்னனு வங்கிப்பரிமாற்றம் மூலம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் பணமாக இல்லாமல், வங்கி மூலமே ஊதியத்தை பரிமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் நின்று செல்லும் போது, கட்டணத்தை பணமாக செலுத்துவதைத் தவிர்த்து, ஆர்.எப்.ஐ.டி. ஸ்டிக்கரை பயன்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரெயில்டிக்கெட்
அதுமட்டுமல்லாமல் ரெயில் பயணத்துக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் டிசம்பர் 31-ந்தேதிவரை ரத்து செய்ய ரெயில்வே துறை சம்மதித்துள்ளது.
மெபைல் பேங்கிங்
மொபைல் பேங்கிங் மூலம் பணம் செலுத்துதல், பெறுதலின் போதும் பெறப்படும் சேவைக்கட்டணம் அடுத்த மாதம் 31-ந்தேதி வரை ரத்து செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
1.55 தபால்நிலையங்கள்
1.55 லட்சம் தபால்நிலையங்களில் மக்களுக்கு பணம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், புதிய ரூ.500, ரூ2000 நோட்டுக்கள் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
85 ஆயிரம் ஏ.டி.எம்கள் தயார்
தற்போது நாட்டில் உள்ள ஏ.டி.எம்.களில் 85 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அடுத்த சில நாட்களில் மீதமுள்ள அனைத்து ஏ.டி.எம்.களும் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.