
பெட்ரோல் நிலையங்கள், சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாங்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
நாடு இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை, பல்வேறு சிரமங்களை அனுபவித்து பொது மக்கள் மாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு நவம்பர் 24ம் தேதி வரை (இன்று) என அவகாசம் வழங்கியது.
பெட்ரோல் நிலையங்கள், சேவைகள் வழங்கும் அனைத்து அரசு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் செல்லாத ரூபாய் நோட்டுகளை இன்று வரை மாற்றி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காலக்கெடு அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை பணப் பரிவர்த்தனைக்காக எங்கும் மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளை உள்ளாட்சி அமைப்புகளில் இன்றைய தேதி வரை கட்டணமாக செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், மின்சார வாரிய அலுவலகங்கள், குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகங்களில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் கட்டணத்தைச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த காலக்கெடுவும் இன்றுடன் முடிவடைவதால், ஏராளமானோர் செல்லாத ரூபாய் நோட்டுகளை கொண்டு இன்றே கட்டணங்களை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்றும் நிலை அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு (ரூ.2,000த்துக்கு ஒரு முறை மட்டுமே செல்லக்கூடிய மாற்று நோட்டு அளிக்கப்படும்.) கை விரலில் மை வைக்கப்படுவதால் அதனை மாற்றுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால், இனி செல்லாத ரூபாய் நோட்டுகளை அதிகளவில் யாரும் மாற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாடிக்கையாளர்களுக்கு பணம் அளிக்க முடியாமல் தட்டுப்பாட்டால் வங்கிக் கிளைகள் திணறி வருகின்றன. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நேற்று ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், 100, 50 ரூபாய் நோட்டுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.2,000 புதிய நோட்டு மட்டுமே இருப்பதால் அதற்கும் பொது மக்கள் சில்லறை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் 2000 புதிய ரூபாய் நோட்டுகள், செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வரும் பொது மக்களுக்கு, ரூபாய் நாணயங்கள் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
500 ரூபாய் புதிய நோட்டுகள் ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வந்துள்ள நிலையில், அவை வங்கிக் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஓரிரு நாளில் அவை அனைத்து வங்கி கிளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்களது ஊதியம், ஓய்வூதியத்தை வங்கி கிளைகளில் இருந்து எடுத்துக் கொள்ள வசதியாக அவர்களுக்கென தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ரொக்கமாக வழங்க இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இந்த மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் வங்கி கிளைகளுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையைத் தவிர்க்க, அனைத்து வங்கிக் கிளைகளிலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அரசுப் பணியை விட்டு விட்டு வங்கிக் கிளைகளுக்கு படையெடுப்பது தவிர்க்கப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.