Hijab issue: ஹிஜாப் வழக்கு ஒத்திவைப்பு… தீர்ப்பு வரும் வரை மத அடையாள உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை!!

Published : Feb 10, 2022, 05:26 PM ISTUpdated : Feb 10, 2022, 05:30 PM IST
Hijab issue: ஹிஜாப் வழக்கு ஒத்திவைப்பு… தீர்ப்பு வரும் வரை மத அடையாள உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை!!

சுருக்கம்

ஹிஜாப் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஹிஜாப் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா உடை அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது.  இதனிடையே, பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று கூறி உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இதுக்குறித்த நீதிமன்ற விவாதங்களை ஊடகங்கள் வெளியீட வேண்டாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!