
இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும், ரெயில் டிக்கெட்டுகளுக்கு ஜூன் 30-ந் தேதி வரை சேவை வரி பிடித்தம் செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், மக்களுக்கு சலுகை அளிக்கும் வகையிலும், சேவைக்கட்டணத்தை கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதியில் இருந்து 2017,மார்ச் 31-ந்தேதிவரை ரத்து செய்வதாக அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், அந்த தேதியை ஜூன் 30வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை டிக்கெட் கட்டணம் உயராது என நம்பலாம்.
இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் இருந்து, ஜூன் 30-ந்தேதி வரை சேவைக்கட்டணம் பயணிகளிடம் இருந்து ஆன்-லைன் முன்பதிவுக்கு வாங்க வேண்டாம் என உத்தரவு வந்தது. இதையடுத்து, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுக்கு நாங்கள் சேவைக்கட்டணத்தை ஜூன் 30வரை வசூலிக்கப்போவதில்லை’’ எனத் தெரிவித்தார்.
ரெயில் டிக்கெட் முன்பதிவின் போது சேவைக்கட்டணமாக ரூ. 20 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுவது ஜூன் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் உயர்வு அடுத்த 2 மாதங்களுக்கு இருக்காது. சேவைக்கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம், நவம்பர் 23 முதல் பிப்ரவரி 28வரை ரூ.184 கோடிவரை பயணிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.