மௌலானா ஆசாத் நேஷனல் ஃபெல்லோஷிப் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை: ஒன்றிய அரசு பதில்!

Published : Aug 11, 2023, 07:50 AM IST
மௌலானா ஆசாத் நேஷனல் ஃபெல்லோஷிப் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை: ஒன்றிய அரசு பதில்!

சுருக்கம்

மௌலானா ஆசாத் நேஷனல் ஃபெல்லோஷிப் (MANF) திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் உயர்கல்வியில் சிறுபான்மை சமூகங்களின் பங்கின் விவரங்களைத் தருக, ஆண்டு மற்றும் சமூக வாரியாக; மதரஸாக்களை நவீன கல்வி நிலையங்களாக மேம்படுத்த ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; மௌலானா ஆசாத் நேஷனல் பெல்லோஷிப் (MANF) திட்டத்தை புதுப்பிக்க அல்லது புதிய பெல்லோஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்த ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

அதற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார். அதில், “யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் ஆகியவற்றின் ஜேஆர்எஃப் திட்டத்தின் படி, இந்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் (MAN) திட்டத்தை செயல்படுத்தி வந்தது. UGC மற்றும் CSIR பெல்லோஷிப்கள் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூக பிரிவுகள் மற்றும் சமூகங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறலாம்.” என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய நாடாளுமன்றம்: திமுகவை டார்கெட் செய்யும் பாஜக அமைச்சர்கள் - என்ன காரணம்?

மேலும், “சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்,  பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் முறையே SC மற்றும் OBC மாணவர்களுக்காகவும் ST மாணவர்களுக்காகவும்  பெல்லோஷிப் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய திட்டங்களால் பயன்பெறும் மாணவர்கள் ஒரே வகையினர்தான் என்பதைக் கருத்தில் கொண்டு - 2022-23 முதல் MANF திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது MANF  ஃபெலோஷிப் பெறுபவர்கள், தற்போதுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அந்தந்த கால வரம்பு முடியும் வரை தொடர்ந்து அந்த பெல்லோஷிப்களைப் பெறுவார்கள். இப்போதைக்கு, MANF திட்டத்தைப் புதுப்பிக்க எந்த யோசனையும் இல்லை” எனவும் அமைச்சர் அளித்துள்ள பதிலில்  கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “உயர்கல்வி பயிலும் சிறுபான்மை சமூக மாணவர்களின் எண்ணிக்கையை சமூக வாரியாக வழங்குமாறு கேட்டிருந்தேன். அதற்கு பதில் தராமல் ஒட்டுமொத்தமாக தந்துள்ளனர். உயர்கல்வி பயிலும் சிறுபான்மை சமூக மாணவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 லட்சம் பேர் அதிகரித்து வந்துள்ளனர். ஆனால் 2019 -20 இல் 29.88 லட்சமாக இருந்த சிறுபான்மை சமூக மாணவர் எண்ணிக்கை 2020-21 இல் 27.51 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர். கோவிட் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்தச் சரிவு சீர் செய்யப்பட்டதா என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களிலிருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு வழியின்றி , 2021-22 க்கான புள்ளி விவரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!