
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடக்கும் போது, முழுக்கட்டணத்தையும் இனிமேல் செலுத்த வேண்டியது இருக்காது. நாம் செல்லும் தொலைவுக்கு ஏற்றார்போல் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது
நாடு முழுவதும் சுமார் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலைகள், கட்டண சாலைகளாக நிர்ணயிக்கப்பட்டு, 362 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17 ஆயிரத்து 220 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த சாலைகளில் பயணிப்போர், குறிப்பிட்ட சில கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணித்தாலும், சுங்கச்சாவடிகளுக்கு இடையில் நிர்ணயிக்கப்பட்ட முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், சுங்கச்சாவடிகள் இருக்கும் புறவழிச்சாலைகளை தவிர்த்து, இதர சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்துகிறார்கள். இதனை தவிர்க்கும் வகையில் பயன்படுத்தும் கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பரிசீலத்து வருகிறது.
இது தொடர்பாக மும்பையில் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து மாநாடு கடந்த வாரம் நடந்தது. அப்போது கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பேசுகையில், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் தொலைவுக்கு ஏற்ப கட்டணம் விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தை முதன் முதலில் ஹரியானா-உத்தரப்பிரதேசம் வழியாக டெல்லி செல்லும் 135 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் சோதனை முயற்சியாக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 96,000 கிலோ மீட்டர் தூரமுடைய தேசிய நெடுஞ்சாலைகளை, 2019ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது