
ஹரியானா மாநிலம், பரிதாபத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் உண்ணும் மதிய உணவில் குட்டி பாம்பு இருந்ததையடுத்து, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிதாபாத்தில் ராஜ்கீயா அரசு உதவிபெறும் மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ‘இஸ்கான்’ நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தான் மதிய உணவுகளை தயாரித்து அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவு லேசாக துர்நாற்றம் அடிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதை சில மாணவிகள் உண்ணத் தொடங்கினர். இந்நிலையில், அந்த உணவில் ‘குட்டிபாம்பு’ ஒன்று இறந்து கிடந்ததைக் மாணவிகள் கண்டு அலறினர்.
ஆனால், பல மாணவிகள் அந்த உணவை பாதி சாப்பிட்டு இருந்தனர். இதைக் கட்டு மாணவிகள் உணவை கீழே போட்டு, வாந்தி எடுத்தனர். சில மாணவிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவியும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் முதல்வர் பிரிஜ் பாலா கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதையடுத்து, துணை ஆணையர் சமீர் பால், தாசில்தார் தலைமையில் பள்ளியின் சமையல் அறை, உணவுகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவிகளின் மதிய உணவின் தரம் மிக மோசமாக இருப்பது விசாரணை நடத்த, கூடுதல் இணை ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.