
நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எதுவும் தன்னிடம் இல்லை என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான நாடு தழுவிய மாணவர்களின் தற்கொலைகள், குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த தற்கொலைகள் பற்றிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி நகரம்/மாவட்டம் வாரியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை குறித்த தரவுகளை கல்வி அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று கூறியுள்ளார்.
புரிந்துகொள்ளுதல், ஊக்கப்படுத்துதல், நிர்வகித்தல், பச்சாதாபம், அதிகாரம் மற்றும் மேம்பாடு: தற்கொலை தடுப்பு - பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள், 2023 என்ற வரைவை கல்வி அமைச்சகம் தயாரித்து வருவதாகவும் அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார். இந்த வரைவானது, பள்ளி அமைப்பின் அனைத்து தொடர்புடையவர்களுக்கும் தற்கொலைகள் பற்றிய ஆபத்து, உண்மைகள், பாதுகாப்பு காரணிகள் மற்றும் ஆபத்தில் உள்ள மாணவர்களை அடையாளம் காண்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றிய புரிதலை வழங்கும்.
‘ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்’ என்பது இந்த வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் உள்ள அடிப்படை நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் சுய-தீங்கு அல்லது தற்கொலை முயற்சியில், அவர்கள் பற்றிய புரிதலுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு வழங்குவதை மையமாகக் கொண்டு இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரைடையேயும் கூட்டாண்மைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கும். மேலும், பள்ளிகளில் தற்கொலையைத் தடுப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை இந்த ஆவணம் வழங்கும்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநலம் மற்றும் நல்வாழ்வுக்காக உளவியல் ஆதரவை வழங்கும் நோக்கத்தில், 'ஆத்ம நிர்பர் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், 'மனோதர்பன்' என்ற முயற்சியை கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் அன்னபூர்ணா தேவி தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
மனோதர்பன் முன்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் உட்பட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தாலோ அல்லது அந்த எண்ணத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றி கவலைப்பட்டாலோ அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டாலோ, சினேகா அறக்கட்டளையை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கவலைகளுக்கு செவி சாய்க்க பலரும் இருக்கின்றனர். உங்களது உயிர் அளப்பரிய சொத்து. அதனை தயவு செய்து மாய்த்துக் கொள்ளாதீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கண்டிப்பாக கூடாது. எந்த வித பிரச்சினைக்கும் அது தீர்வல்ல.)