
செல்லாத 500, 1000 நோட்டுகளை மீண்டும் வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்தவர்களுக்கு எதிராக எந்த விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.
ரூபாய் நோட்டு தடை
நாட்டில் கருப்புபணம், ஊழல், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 50 நாள் அவகாசம் கொடுத்த மத்திய அரசு செல்லாத நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்கள், ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது.
காலக்கெடு நீட்டிக்கவில்லை
அந்த காலக்கெடு முடிந்தபின், இந்த ஆண்டு ஜனவரி முதல் 31-ந்தேதி வரை வெளிநாடு வாழ் இந்தியர்கள், ரூபாய் நோட்டு தடைகாலத்தில் வெளிநாட்டில் வசித்தவர்கள், மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் உரிய விளக்கத்துடன் செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியது. ஆனால், அதன்படி யாருக்கும் டெபாசிட்செய்ய அனுமதிக்கவில்லை.
நடவடிக்கை
மேலும், செல்லாத ரூபாய்களில் 10 நோட்டுகளுக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
வழக்கு
இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் செல்லாத ரூபாய் நோட்டுகளை உண்மையாகவே டெபாசிட்செய்ய முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்கள், மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் என தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
அதில், தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதிக்கக் கோரி இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
விசாரணை
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோடிக்கணக்கில் இல்லை
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “ மனுதாரர்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை வங்கியில் டெபாசிட் முடியாமல் தவிக்கிறார்கள். மத்திய அரசு எந்தவிதமான முன் எச்சரிக்கையும் செய்யாமல் அறிவித்துவிட்டது.
செல்லாத நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் டெபாசிட் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். அவர்கள் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். மனுதாரர்கள் சார்பில் கோடிக்கணக்கில்டெபாசிட் செய்யவில்லை, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய இருக்கிறார்கள்’’ என வாதிட்டார்.
திட்டவட்டம்
முன்னதாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு 2016, டிசம்பர் 30-ந்தேதிக்கு மேல், செல்லாத ரூபாய்களை வங்கியில் கொடுத்து மாற்ற யாருக்கும் சிறப்பு அனுமதி தரப்படாது. அவ்வாறு கொடுப்பது ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் உண்மைத்தன்மையை வீணாக்கிவிடும் என்று உறுதிபடத் தெரிவித்தது.
அரசியல் சாசன அமர்வு
அதற்கு நீதிபதிகள் , “ ரூபாய் நோட்டு தடைச் சட்டம் இன்னும் அமலில் இருப்பதால், சட்டத்துக்கு எதிராக மனுதாரர்களுக்கு எந்தவிதமான இடைக்கால நிவாரணத்தையும் நீதிமன்றம் வழங்கமுடியாது. அதே சமயம், தனிநபர் மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். அப்போது மனுதாரர்கள் அங்கு முறையிடலாம்’’ என்றனர்.
நடவடிக்கை இருக்காது
இதையடுத்து மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் வேணுகோபால் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “ ரூபாய் நோட்டு தடைச் சட்டத்தின்படி செல்லாத நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்து இருப்பவர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், மனுதாரர்கள் மீது மட்டும் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. அவர்கள் மனுவில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகவும் கையில் வைத்து இருக்க கூடாது’’ என்றார்.
அதேசமயம், செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்ய அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.