
போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண், இந்திய சிறையில் பெற்றெடுத்த குழந்தைதான் ஹினா. 11 ஆண்டுகள் தனது தாயுடன் சிறையில் கழித்துவிட்டு, தற்போது தனது எதிர்கால வாழ்க்கையை வாழ தனது தாய்நாட்டு கொடியை கைகளில் ஏந்தி பாகிஸ்தானுக்கு சென்றாள்.
போதை மருந்து கடத்தல்
இந்திய எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷிதா என்பவரும், அவரின் இரு மகள்கள் பாத்திமா, மும்தாஜ் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதையடுத்து, அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் குழந்தை
ரஷிதா 2008 ம் ஆண்டு சிறையிலேயே காலமானார். கைது செய்யப்படும் பாத்திமா கர்ப்பிணியாக இருந்ததால், சிறையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 11 ஆண்டுகளாக சிறுமியும் சிறையில் இருந்துள்ளார். அவர்தான் ஹினா.
விடுதலை
இவர்களின் 10 ஆண்டுகள் தண்டனைக்காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தாததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் 4 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. இதனால் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.
எல்லையில் வரவேற்பு
இதையடுத்து, சிறுமி ஹினா கைகளில் மெகந்தி பூச்சுடன், இந்திய உடைகளுடன், தனது தாய் பாத்திமா, சிற்றன்னைமும்தாஜ் ஆகியோருடன் அடாரி வாஹா எல்லை வழியாக நேற்று பாகிஸ்தானுக்கு சென்றார்.
வேறு சில வழக்கில் கைதாகி சிறைதண்டனை அனுபவித்து முடித்த 10 பாகிஸ்தான் நாட்டவர்களையும் இவர்களுடன் சேர்த்து இந்திய ராணுவம் ஒப்படைத்தது. அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், அவர்களுக்கு தங்கள் நாட்டு கொடியை கொடுத்தனர்.
ஆவலுடன் காத்திருப்பு
ஹினாவை இதுவரை அவரின் தந்தை சைபுல் ரஹ்மான் பார்த்தது இல்லை. பாத்திமா கைதாகும் போது கர்ப்பணியாக இருந்தார், இந்திய சிறையிலேயே ஹினாவை பெற்று வளர்த்ததால், சைபுல்லால் ஹினாவை பார்க்க முடியவில்லை. இதனால், ஹினாவை பார்க்க சைபுல் ஆவலுடன் காத்திருந்தார். முதல்முறையாக தனது மகளைப் பார்த்த சைபுல் அவர்களை கட்டித்தழுவி தூக்கி கொஞ்சினார்.
புதுவாழ்க்கை
சைபுப் ரஹ்மான் தொலைபேசியில் நிருபர்களிடம் கூறுகையில், “ அமர்தசரஸ் பொற்கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு முடியவில்லை. லாகூரில் உள்ள புகழ்பெற்ற தாதா கஞ்ஜ் பக்ஸ் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு புதுவாழ்க்கையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.