
பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் போது சாதியையும், மதத்தையும் கூற மறுத்த கேரள அரசியலின் இளம் தலைவர்கள்தான் இப்போது அந்த மாநில மக்கள் மத்தியில் ‘ஹாட்’
அதுமட்டுமல்ல, “தங்களின் பிள்ளைகளுக்கு மதம் கிடையாது, தேவைப்பட்டால் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்யட்டும்’’ எனபேஸ்புக்கில் இவர்களின் எழுத்துக்கும் பாராட்டு குவிகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ராஜேஷ் எம்.பி., காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. வி.டி. பலராம் ஆகியோரே இந்த முற்போக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்கள்.
முற்போக்கு பேச்சு
இருவரும் தங்களின் பிள்ளைகளை அதிக கட்டணத்தில் உயர்ந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்காமல், அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். இன்று இருவரும் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றபோது, சேர்க்கை படிவத்தில் இருவரும் தங்களின் மதத்தையும், சாதியையும் குறிப்பிடவில்லை. இதை பெருமையாக தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
மதம் பிள்ளைகள் தேர்வு
திரிதலா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலராம் வௌியிட்ட பதிவில், “ என் மகன் அதிவைத் மனவ் இன்று பள்ளியில் சேர்ந்துள்ளான். அரிக்கட் நகரில் உள்ள எனது வீட்டுக்க அருகே இருக்கும் அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு இருக்கிறேன். என் மகனைச் சேர்க்கும் போது, தலைமை ஆசிரியர் படிவத்தில் சாதி, மதம் குறித்து கேட்டார். ஆனால், நான் அதில் எதையும் நிரப்ப வேண்டாம் என்றேன். என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், அவர்களுக்கு விருப்பம் இருந்தால் எந்த மதத்தையும் தேர்வு செய்யட்டும்’’ என்று பதிவிட்டார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெருமையாக இருக்கிறது
இவர் இப்படி என்றால், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. ராஜேஷ் தனது முதல் குழந்தை மட்டுமல்லாது, 2-வது குழந்தையையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அவர் பேஸ்புக்கில் வௌியிட்ட பதிவில், “ என் 2-வது குழந்தையை இன்று பள்ளியில் சேர்க்கும் போது, சேர்க்கை படிவத்தில் சாதி, மதம் குறித்த விவரத்தை எழுதவில்லை. என் மாநிலம் ‘சமபந்தி போஜனத்தை’(சமபந்தி போஜனம் என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்பது) 100-வது ஆண்டாக கொண்டாடி வரும் போது, சாதி, மதத்தை எழுதாமல் விட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
தன்னுடைய குழந்தைகளை ஏன் அரசுப்பள்ளியில் சேர்த்தேன் என்பது குறித்த காரணங்களை ராஜேஷ் பெருமையுடன் கூறுகிறார். அவர் கூறுகையில், “
தாய் மொழிதான் முக்கியம்
நான் ஏன் எனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தேன் தெரியுமா? நான் எம்.பி. என்பதால், மத்தியஅரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் எளிதாக இடம் கிடைத்துவிடும். ஆனால், அதை உதறிவிட்டு இப்போது எனது 2-வது மகள் பிரியா தத்தா கிழக்கு யக்கரா அரசுப்பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்து இருக்கிறேன். மூத்த மகள் நிரஞ்சனா பாலக்காட்டில் உள்ள மோயன்ஸ் மகளிர் அரசுபள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கேந்திரா வித்யாலயா பள்ளியில் எனது குழந்தைகளை படிக்க வைத்தால், தாய்மொழியான மலையாளத்தை படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும் அவ்வாறு நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசுபள்ளியில் படிக்க வைக்கிறேன்.
அரசுக்கல்வியில் உள்ள தரம் குறையவில்லை என்பதில் நம்பிக்கை வைத்து இருக்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவுக்கும் பேஸ்புக்கில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் சொல்வதைச் செய்யும் அரசியல் தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்து வருகிறார்கள். அவர்களி இவர்களும் கலந்து விட்டார்கள்.