அரசியலில் எந்த திருப்பங்களும், மாற்றங்களும் எந்த நேரத்திலும் நடக்கலாம். அதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை 2014 -ல் தேர்வு செய்தபோது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இவர் 2023, ஜூன் 23 ஆம் தேதி கூறுகையில், ''17 கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்'' என்றார். இவரது இந்தப் பேச்சுதான் ''இந்தியா'' கூட்டணி அமைவதற்கும் காரணமாக இருந்தது. அதேபோல், அந்தக் கூட்டணியில் இருந்தும் முதல் ஆளாகவும் வெளியேறினார். பாஜகவில் ஐக்கியமானார் நிதிஷ் குமார். ஆனாலும், இந்தியா கூட்டணி வலுவாக அமைந்தது.
பீகாரில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமார் களம் கண்டார். போட்டியிட்ட 16 இடங்களில் 13 இடங்களில் வெற்றி பெற்றார். 17 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
undefined
பீகாருக்கு தனி அந்தஸ்து:
இந்த முறை நிதிஷ் குமார் கட்சி தாவல், கூட்டணி தாவல் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிரட்டி வருவார் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பார் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர்கள் நம்பிக்கை அளித்து வருகின்றனர். ஆனால், முதலில் மோடியை எதிர்த்தவர் என்ற முறையிலும் பீகாருக்கு தனி அந்தஸ்து தொடர்ந்து கோரி வந்தார் என்ற முறையிலும் மத்தியில் பாஜக அமைவதற்கு ஆதரவு கொடுத்தாலும் இவர் அதிக நெருக்கடிகளும் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நிதிஷ் குமாரின் தந்திரம்:
மறுபக்கம் நிதிஷ் குமாருக்கும் பாஜகவின் தயவு தேவைப்படுகிறது. 2020 சட்டசபை தேர்தலில் 74 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தார். தற்போது பாஜகவின் தயவில்தான் ஆட்சியில் இருக்கிறார். ஆதலால், தனது பதவிக் காலம் முடியும் வரை மத்தியில் பாஜகவுக்கு எந்த நெருக்கடியும் நிதிஷ் குமார் கொடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த நிதிஷ் அதிரடியாக பாஜகவுடன் கைகோர்க்க தயங்கவில்லை. அதனால் எதுவும் அரசியலில் உறுதியில்லை. 2020 சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 73 இடங்களில் வென்று இருந்தது. தற்போதும், பாஜகவை பகைத்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் பக்கம் நிதிஷ் சாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு:
இதுமட்டுமின்றி, சாதிவாரியான மக்கள் கணக்கெடுப்பிற்கு மத்திய அரசை நிதிஷ் குமார் வற்புறுத்துவார். பீகாரில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக நிதிஷ் குமார் உயர்த்தி இருக்கிறார்.
கிங் மேக்கர் சந்திரபாபு நாயுடு:
ஆந்திராவில் பெரிய அளவில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. மக்களவை சபாநாயகர் பதவியை தனது கட்சியினருக்கு கேட்கலாம் என்ற பேச்சு வெளியாகியுள்ளது. மேலும், உள்துறை அமைச்சராக அமித் ஷாவுக்கு பொறுப்பு வழங்கக் கூடாது என்று தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், விவசாயம், ஜல் சக்தி, ஐடி, இணை நிதித்துறை அமைச்சர் பதவிகளை சந்திரபாபு நாயுடு கேட்டு அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆந்திரா சிறப்பு அந்தஸ்து:
இத்துடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வந்த நிலையில் இதுவும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. தலைநகரம் ஐதராபாத், தெலுங்கானா வசம் சென்றுவிட்டது. உருவாக இருக்கும் புதிய தலைநகருக்கு அதிக நிதியும், மாநில சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அமைச்சரவைக்கு சந்திரப்பாபு நாயுடு அழுத்தம் கொடுக்கலாம்.
தெற்கில் இருந்து பிரதமர்:
தெற்கில் இருந்து ஒரு பிரதமர் என்று அமித் ஷா கூறி வந்தார். அப்படி பார்க்கும்போது, சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்கவும் பாஜக தயங்காது என்றே மற்றொரு பேச்சும் எழுகிறது.
வலைவீசும் இந்தியா கூட்டணி:
இத்துடன் எப்போதும் பாஜகவையும், மோடியையும் எதிர்த்து வந்த சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவருக்கும் முக்கிய பொறுப்புகளை கொடுப்பதாக இந்தியா கூட்டணியும் வலை வீசி வருகிறது. நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவியும், சந்திரபாபு நாயுடுவுக்கு முக்கிய அமைச்சரவை பொறுப்பும் கொடுப்பாதாக வாக்களித்துள்ளது. மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு பக்கம் செய்தி சென்று கொண்டு இருக்கும்போது, மறுபக்கம் தெற்கில் இருந்து ஒரு பிரதமராக சந்திரபாபு நாயுடு உருவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக தெலுங்கு தேசம் இருக்கிறது.
இதுவரை கூட்டணியில் இல்லாமல் தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து, தாங்கள் நினைத்ததை சாதித்து வந்த பாஜக இந்த முறை கூட்டணிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.