பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார்.
பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார். பீகாரில் 2020ம் ஆண்டு தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று, நிதிஷ் குமார் முதல்வராகினார். ஆனால், கடந்த சில மாதங்களாக பாஜகவு தலைவர்களுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் பாஜகவுடனான நட்பை நிதிஷ் குமார் முறித்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும், பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.
இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்
இதனால் பாஜக உடனான கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார். பாஜகவை விட்டு விலகி வந்த ஜேடியூவுக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் ஆளுநரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா: ஆட்சியை இழந்தது பாஜக
நிதிஷ்குமாரின் ஆதரவு கடிதங்களை ஏற்றுக் கொள்ளும் ஆளுநர் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உள்ளார். இதனிடையே பாட்னாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல்வராக 8 ஆவது முறையாக பதவியேற்க உள்ளார். பீகார் முதல்வராக முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் 2005-2010, 2010-2014 என தொடர்ச்சியாக 8 ஆண்டுகளும் 2015-2022 என 7 ஆண்டுகளும் முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகித்தார். பீகார் முதல்வராக சுமார் 15 ஆண்டுகள் பதவி வகித்த நிதிஷ்குமார், அம்மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார்.