காலையில் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார், அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஆர்.ஜே.டி.யுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார் பாஜகவின் ஆதரவுடன் முதல்வர் பதவியைத் தக்கவைத்துள்ளார்.
காலையில் ஆளுநரைச் சந்தித்து நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதனை ஏற்ற ஆளுநர் அடுத்த ஆட்சி அமையும் வரை காபந்து முதல்வராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியுடன் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்றும் இந்தியா கூட்டணியில் எதுவுமே சரியில்லை என்றும் கூறினார்.
அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளனர் பிரேம் குமார் (பாஜக), விஜய் சவுத்ரி (ஜேடியு), பிஜேந்திர யாதவ் (ஜேடியு), ஷ்ரவன் குமார் (ஜேடியு), சந்தோஷ் குமார் (ஜேடியு), சுமித் குமார் சிங் (சுயேச்சை) ஆகியோரும் நிதிஷ் குமாருடன் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
ராஜ தந்திரங்கள் தெரிந்த அரசியல்வாதி... பீகார் முதல்வராக நிதிஷ் குமார் கடந்து வந்த பாதை
நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தந்திருக்கிறார். ஏற்கெனவே பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் நான்கு எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்கின்றனர்.
114 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள ஆர்ஜேடி (79), காங்கிரஸ் (19) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் (16) கூட்டணியில் பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் குறைவாக உள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.