ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
பீகார் மாநில ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லி அரசியல்சாசன அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து லாலன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அக்கட்சியின் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அவரது ராஜினாமா முடிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் பதவியை லாலன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை நிதிஷ்குமார் ஏற்கனவே செயல்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டில் தேசிய தலைவராக பதவியேற்ற லாலன் சிங், இரண்டாண்டுகள் அப்பதவியில் செயல்பட்டுள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் குழப்பம்!
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற அரசியல்சாசன அரங்கின் முன் திரண்ட அக்கட்சியினர், நிதிஷ் குமாரை பீகார் அங்கீகரித்துள்ளது; அடுத்து நாடும் அவரை அங்கீகரிக்கும். அவர்தான் அடுத்த முதல்வர் என முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டத்தின்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த முன்மொழிவை மல்லிகார்ஜுன கார்கே கண்ணியமாக மறுத்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என விளக்கம் அளித்திருந்த நிலையில், அவர்தான் அடுத்த முதல்வர் என அவரது கட்சியினர் முழக்கமிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.