ராமர் கோயில் கும்பாபிஷேகம்: காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் குழப்பம்!

By Manikanda Prabu  |  First Published Dec 29, 2023, 4:45 PM IST

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

கும்பாபிஷேக விழாவுக்கு ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அருண்கோவில், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் தேசாய் உள்ளிட்ட பல பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளார். ஆனால், விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது எனவும், கட்சி சார்ந்த மத விழாவாக அதனை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “கடவுள் கூப்பிட்டால் மட்டுமே கோயில்களுக்குச் செல்லும் மரபைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பகவான் அழைத்தால், நான் செல்வேன்.” என்றார். “நான் தரிசனம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறேன். படிக்கட்டுகளில் இறங்கும்போது, நான் கடவுளை தரிசனம் செய்கிறேன், நான் வாயில்களை விட்டு வெளியே வரும்போது, ஒவ்வொரு முறையும் கடவுளை தரிசனம் செய்கிறேன். இனி, நான் எந்தக் கடவுளை தரிசனம் செய்யப் போக வேண்டும் என்று சொல்லுங்கள்?” எனவும் அவர் எழுப்பிய கேள்விகள் கும்பாபிஷேக விழாவில் அவர் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னதாக, கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அவர்கள் முக்கியப் பங்காற்றினர். எனவே, சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அயோத்தி ராமர் கோயிலில் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என பாஜக எம்பி சுப்ரதா பதக் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஜார்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால், என்னை அழைத்தால், ராமர் கோயில் தொடக்க விழாவில் கண்டிப்பாக பங்கேற்பேன் என்றார். “நான் கோவில்கள், மசூதிகள், குருத்வாரா மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வருகிறேன். அங்கு செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. “என அவர் கூறினார்.

ராமர் கோவில் நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.சி.வேணுகோபால், ராமர் கோயில் நிகழ்வை பாஜக அரசியலாக்குகிறது. அக்கட்சியின் வலையில் காங்கிரஸ் விழாது. எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்றார். அதேசமயம், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது குறித்த நேரடியான கேள்விக்கு பதிலளிக்காமல் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்து விட்டார்.

பெண் காவல் அதிகாரியைத் தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆனால், கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் எம்.பி.யும், காரிய கமிட்டி உறுப்பினருமான சசி தரூர் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளார். “நம்பிக்கை தொடர்பான விஷயங்களை தனிப்பட்டது. கோயில்கள் தெய்வீகத்துடன் தொடர்புடையது; அது அரசியலுக்கான மேடை அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என கேரளாவை ஆளும் சிபிஎம் கட்சி அழைப்பிதழை வெளிப்படையாக நிராகரித்துள்ளது. அதேசமயம், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மென்மையான இந்துத்துவா போக்கை முஸ்லீம் அமைப்புகள் சாடியுள்ளன.

காங்கிரஸின் மேற்குவங்க பிரிவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு உயர்மட்ட தலைமைக்கு எதிராக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், தேர்தல் தோல்விகளைத் தவிர்க்க, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஎம்சி, ஜேடி(யு), ஆர்ஜேடி மற்றும் சிவசேனா (யுபிடி) போன்ற கட்சிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால், காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. “இதெல்லாம் அரசியல், பாஜக ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்? இது பாஜகவின் திட்டம். பாஜகவின் நிகழ்ச்சி முடிந்ததும் அயோத்திக்கு செல்வோம்.” என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

click me!