
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அபாய கட்ட நிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசும், டெல்லி பாஜக அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் காற்று மாசுபாட்டை குறைக்க முடியவில்லை. இந்த நிலையில், டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு தொற்று ஏற்பட்டு விடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது.
உதய் மஹுர்கர் எழுதிய 'மை ஐடியா ஆஃப் நேஷன் ஃபர்ஸ்ட் - ரீடிஃபைனிங் அன்அலாய்ட் நேஷனலிசம்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, ''இன்று உண்மையான தேசியம் ஏதேனும் இருந்தால், அது இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதில்தான் உள்ளது. நான் டெல்லியில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கிறேன், எனக்கு தொற்று ஏற்படுகிறது. டெல்லி ஏன் இவ்வளவு மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது? என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''நான் போக்குவரத்துத் துறை அமைச்சர், 40% மாசுபாடு எங்களால் ஏற்படுகிறது. புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்ய ரூ.22 லட்சம் கோடி செலவழிக்கிறோம். இது என்ன மாதிரியான தேசியம்? இவ்வளவு பணத்தைச் செலவழித்து, நம் சொந்த நாட்டையே மாசுபடுத்தி வருகிறோம். மாற்று எரிபொருள்கள் மற்றும் உயிரி எரிபொருள்களில் நாம் தற்சார்பு அடைய முடியாதா?'' என்று கூறினார்.
மிகவும் மோசமான நிலையில் டெல்லி
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, டெல்லி ஐடிஓ பகுதியைச் சுற்றியுள்ள காற்றுத் தரக் குறியீடு (AQI) 374 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 'மிகவும் மோசம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனா. விக்ஸித் பாரத்- ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டபோது காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளி காரணமாக காற்று மாசுபாடு குறித்த விவாதம் நடத்த முடியவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியது குறிப்பிடத்தக்கது.