லடாக்கில் ரூ.1170 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, யூனியன் பிரதேசமான லடாக்கில் 29 சாலைத் திட்டங்களுக்கு ரூ.1170.16 கோடி ஒதுக்கீடு செய்து அத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2023-24-ம் நிதியாண்டில் மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் கீழ் 8 பாலங்களுக்கு கூடுதலாக ரூ.181.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் பக்கத்தில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பரப்பளவில் பெரிய யூனியன் பிரதேசமாகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் உள்ள லடாக்கில், மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சிகள் தொலைதூரக் கிராமங்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் சாலை மேம்பாட்டு நடவடிக்கைகள் அப்பகுதியில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் மேம்பாட்டுக்கு பங்களிக்கும் எனவும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தாக்கு!
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்த நிலையில், லடாக்கில் ரூ.1170 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.