
பீகாரில் மகா கூட்டணியில் லாலு நிதிஷ் கட்சிகளுக்கு இடையேயான மோதல் நீடித்து வருகிறது. அரசு விழா நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.
லாலுவின் மகனும், பீகார் துணை முதல் ஆமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து மகா கூட்டணியில் மோதல் ஏற்பட்டு வருகிறது. தேஜஸ்வி பதவி விலக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், பீகார் அரசு சார்பில் பாட்னாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் இருக்கையில் தேஜஸ்வி பெயர் இடம் பெற்று இருந்தது.
ஆனால், தேஜஸ்வி இந்த விழாவிற்கு வரவில்லை. இதனால் அவருடைய பெயர் முதலில் மறைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.
முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் இந்த விழாவில் பங்கேற்றார்.
கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து இரு கட்சியினருக்கும் இடையே சமாதான முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
லாலுவும் அவரது குடும்பத்தினரும் தங்களது சொத்து குவிப்பு குறித்து விளக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சி செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் அளித்த பேட்டி வருமாறு:-
பா.ஜ., தலைவர்கள் கூறி வரும் பினாமி சொத்து பரிமாற்றம் புகார் குறித்து லாலு குடும்பத்தினர் விளக்க வேண்டும். தங்களிடம் உள்ள பெரிய சொத்துகள் மற்றும் பணம் எப்படி வந்தது என்பது குறித்தும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
சி.பி.ஐ., சோதனைக்கு காரணமான வணிக வளாகம் மற்றும் நிலங்கள் தங்களுக்கு சொந்தமானதா இல்லையா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.