காங்., ஆட்சியில் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு… நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 6:34 PM IST
Highlights

காங்கிரஸ் ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தனியார் நிறுவனம் தேவாஸ் ஆகியவற்றின் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்ரோவின் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், அலைக் கற்றைகளை சந்தைப்படுத்துதல் போன்றவற்றை ஒப்பந்த அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆன்ட்ரிக்ஸ். அதேபோல தேவாஸ் நிறுவனம் முன்னாள் இஸ்ரோ தலைவர் மற்றும் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனமும் பெங்களூருவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் பல தேவாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. இஸ்ரோவின் சேவைகளை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜிசாட்-6,  ஜிசாட்-6 ஏ ஆகிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி 70 மெஹாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் (S-Band) அலைவரிசை மூலமாக செல்போன்களில் வீடியோ, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட சேவைகளை வழங்க தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி 20 ஆண்டுகளுக்கு தேவாஸ் நிறுவனம் இந்த அலைவரியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு ரூ.1,000 கோடி என்ற மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. அதன்படி தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கையில், தேவாஸ் நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்தது தெரியவந்தது. இதனால் இஸ்ரோவுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேவாஸ் நிறுவனம் ரூ.578 கோடி லாபம் பெறும் வகையில் இஸ்ரோ வர்த்தக அமைப்பு அதிகாரிகள் வழிவகுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தை 2011 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்தது. உடனே ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மீது சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் தேவாஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தேவாஸ் நிறுவனத்துக்கு இஸ்ரோ ரூ. 4,400 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை போதாது என சர்வதேச தீர்ப்பாயங்களில் முறையிட்டது. அனைத்துமே தேவாஸ் நிறுவனத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கின. இஸ்ரோ ஒப்பந்தத்தை ரத்து செய்தது தவறு என கூறின.

இந்த விவகாரம் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் சூடுபிடித்தது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. மாதவன் நாயர் உள்ளிட்ட முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதேபோல தேவாஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு சார்பில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பாயம், மோசடி செய்வதற்காகவே சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது தான் தேவாஸ் நிறுவனம் என்றது. இதனை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு உலகளாவிய தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களிடம் முறையிடும் என தெரிகிறது. தீர்ப்பு சாதகமாக வந்தால் தேவாஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு இழப்பீடு செலுத்த தேவையில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் ஆட்சியின்போது ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த வழக்கை காங்கிரஸ் மூட பார்த்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அம்பலமாகியுள்ளது என்று குற்றம்சாட்டினார். 

click me!