அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 திட்டத்தைத் தொடர்ந்து இன்று விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா எல்1 திட்டத்திற்கும் தமிழர் ஒருவரே இயக்குநராக செயல்படுவது தெரிய வந்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைப்பாக இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு இஸ்ரோ பெற்றுத் தந்துள்ளது. அதுவும் மிகக்குறைந்த நிதிச் செலவில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்கச் செய்துள்ளது.
நாடு முழுவதும் சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த தருணத்தில் சந்திரயான் திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் திட்ட இயக்குநராக செயல்பட்டதை தமிழர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா எல்1 திட்டத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் திட்ட இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல்... அப்போ எதிர்ப்பு! இப்போ ஆதரவு! அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி .!
தமிழகத்தின் தென்கோடி எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நிகர் ஷாஜி தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக செயல்படுகிறார். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்து இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த நிகர் ஷாஜி அப்போதே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதன் பின்னர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த நிகர் ஷாஜி, பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்து பின்னர் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்துள்ளார்.