
கடந்த மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) லண்டன் செல்ல உள்ளது.
என்ஐஏ அதிகாரிகள் பிரிட்டன் செல்லும்போது இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக முக்கிய வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த வாரம், உள்துறை அமைச்சகம் என்ஐஏ விசாரணைக்கு அனுமதி வழங்கியது. இந்தியா, பிரிட்டன் உடனான பேச்சுவார்த்தையின்போது, இந்தியத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி கவலை தெரிவித்ததோடு, காலிஸ்தானி ஆர்வலர்கள் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதி செய்வதாகவும் கூறியுள்ளது.
சென்ற மார்ச் மாதம் பஞ்சாப் போலீசார் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் முயற்சியைத் தொடங்கியதன் எதிரொலியாக, மார்ச் 19ஆம் தேதி லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது. தூதரகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு பறந்துகொண்டிருந்த மூவர்ணக் கொடியை இறக்க முயற்சித்தனர்.
இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டது.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதல் நடைபெற்றபோது பிரிட்டன் அரசு இந்தியத் தூதரகத்துக்கு முழு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது குறித்து பிரிட்டன் தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்தியாவுக்கான பிரிட்டனின் துணைத் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், நடந்த சம்பவம் "அவமானகரமானது" என்றும் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குறிப்பிட்டு பதில் அளித்தார்.