பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையாதக கூறப்படும் வழக்கு தொடர்பாக மூன்று மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாத அமைப்பான ‘கஸ்வா-இ-ஹிந்த்’ தொடர்பாக மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.
என்.ஐ.ஏ. தகவலின்படி, கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பீகார் மாநிலம் தர்பங்காவில் ஒன்று, பாட்னாவில் இரண்டு, குஜராத்தின் சூரத்தில் ஒரு இடம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பரேலி என மூன்று மாநிலங்களில் உள்ல மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையின் போது, மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவின் புல்வாரிஷரிப் பகுதியைச் சேர்ந்த தாஹிர் என்கிற மர்கூப் அகமது டேனிஷ் என்பவரை பீகார் போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கானது என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மர்கூப் அகமது டேனிஷ் மீது கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டவர்களால் இயக்கப்படும் கஸ்வா-இ-ஹிந்த் பயங்ரவராத அமைப்பின் உறுப்பினராக இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பை இந்தியாவில் விரிவுபடுத்துவதற்காக ஒத்த சிந்தனையுடைய இளைஞர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி: சரத் பவாருக்கு ஃபோன் போட்ட ராகுல், சோனியா!
விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜைன் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘கஸ்வா-இ-ஹிந்த்’ என்ற வாட்ஸ்அப் குழுவின் அட்மினாக மர்கூப் அகமது டேனிஷ் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாட்டில் ஸ்லீப்பர் செல்களை நிறுவும் நோக்கத்துடன் பல இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை அக்குழுவில் அவர் இணைந்திருந்துள்ளார். மேலும், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிபி மெசஞ்சரில் ‘கஸ்வா-இ-ஹிந்த்’ என்ற பல்வேறு சமூக ஊடக குழுக்களையும் அவர் உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. 'BDGhazwa E HindBD' என்ற பெயரில் மற்றொரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் வங்கதேச நாட்டினரையும் சேர்த்துள்ளார்.
மேலும் விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கபப்டும் பல்வேறு நபர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருப்பதும், கஜ்வா-இ-ஹிந்த் என்ற கருத்தை பரப்புவதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா, தர்பங்கா, கிழக்கு சம்பாரண், நாளந்தா மற்றும் மதுபானி மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் என்ஐஏ முதன் முதலாக சோதனை நடத்தியது. ஜூலை 14 ஆம் தேதி பாட்னாவின் புல்வாரிஷரிப் பகுதியில் நடந்த சோதனையின் போது, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான தீவிரமான PFI இன் ‘மிஷன் 2047’ பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத அமைப்பு தொடர்பாக, அதர் பர்வேஸ், முகமது ஜலாலுதீன் மற்றும் அர்மான் மாலிக் ஆகியோரை முதல் முதலாக என்.ஐ.ஏ. கைது செய்தது. இதில், ஜலாலுதீன் ஜார்கண்ட் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார், இவர் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மர்கூப் மற்றும் ஷபீரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.