
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு முக்கியக் குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கில், பயங்கரவாதச் சதித்திட்டத்தின் முழுப் பின்னணியையும் வெளிக்கொணரும் முயற்சியில் என்ஐஏ தீவிரம் காட்டி வருகிறது.
டாக்டர் முஸாமில் ஷகீல் கணாய் (புல்வாமா), டாக்டர் அதீல் அகமது ராதர் (அனந்த்நாக்), டாக்டர் ஷாஹீன் சயீத் (லக்னோ), முஃப்தி இர்ஃபான் அகமது வாகே (சோபியான்) ஆகிய நால்வரை என்.ஏ.ஐ. ஶ்ரீநகரில் வைத்து கைதுசெய்துள்ளது.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின் பேரில், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் வைத்து இந்த நான்கு முக்கியக் குற்றவாளிகளையும் என்ஐஏ காவலில் எடுத்துள்ளது.
என்ஐஏ விசாரணைகளின்படி, இவர்கள் அனைவரும் டெல்லி செங்கோட்டை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் என்ஐஏ ஏற்கனவே அமீர் ரஷீத் அலி, ஜஸிர் பிலால் வானி என்கிற டேனிஷ் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருந்தது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார் அமீர் ரஷீத் அலி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜஸிர் பிலால் வானி என்கிற டேனிஷ் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் சதித்திட்டத்தை முழுமையாக வெளிக்கொண்டுவர என்ஐஏ விசாரணையில் ஈடுபட்டுள்ளது.