தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக தலைநகர் சென்னையின் மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். இவை தவிர, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
ஆயுள் தண்டனை கைதியும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியுமான டி.நசீர் என்பவர் பெங்களூரு மத்திய சிறைக்குள் பல நபர்களை தீவிரவாதிகளாக ஆக்கி, நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், பயங்கரவாதிகள் பலர் அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக மாறியதாக தெரிகிறது.
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியுமான டி.நசீர் என்பவரால், பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏழு நாட்டுத் துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், நான்கு வாக்கி-டாக்கிகள், 12 செல்போன்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பின்னர், இந்த வழக்கு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் உள்ள 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. அதன்போது, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியால் பெங்களூரு சிறையில் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் கான், தன்வீர் அகமது, முகமது பைசல் ரப்பானி மற்றும் முகமது பரூக் ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. முக்கிய சந்தேக நபரான ஜுனைத் அகமதுவின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Lok Sabha election 2024 மக்களவைத் தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
இந்த வழக்கு தொடர்பாக, 2013ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த டி.நசீர், ஜுனைத் அகமது, சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், ஜுனைத் அகமது, சல்மான் கான் ஆகிய இருவரும் வெளிநாடு தப்பி சென்று விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு ஆர்டி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஜுனைத் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஜுனைத் உள்ளிட்ட ஐந்து பேர் சிறையில் இருந்தபோது நசீரால் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், நசீரின் அறிவுறுத்தலின்படி, பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த ஜுனைத் உள்ளிட்டவர்கள் சதித்திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் ஜுனைத், தனது கூட்டாளிகளுடன் மறைமுகமாக தொடர்பில் இருப்பதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கான நிதிகளை அவர்களுக்கு வழங்குவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.