மக்களவைத் தேர்தல் 2024 தேதி தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. உத்தேச தேர்தல் தேதியை வெளியிட்டு, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த மாதம் மத்தியில் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகளுடன், இம்முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு போன்று ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. மார்ச் 14ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
இதனிடையே, 195 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன. பிரதமர் மோடி மீண்டும் வாரனாசியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஹாட்-ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின!
அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருவதற்கிடையே, வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்ய நேரம் எடுக்கும் என்றும், பாஜக போல் அவசரப்படவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.