மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்! பிரதமர் மோடி பெருமிதம்!

Published : Nov 21, 2025, 08:33 PM IST
labour law

சுருக்கம்

மத்திய அரசு, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு புதிதாக உருவாக்கிய 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (New Labour Codes) இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்கள், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்போ அல்லது சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திலோ இயற்றப்பட்டவை. இவை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இல்லாததாலும், தனித்தனி பிரிவுகளாகச் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்ததாலும், இச்சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டத் தொகுப்புகள்

மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ள புதிய சட்டத் தொகுப்புகள் பின்வருமாறு:

1. தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019 (Code on Wages, 2019)

2. தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020 (Industrial Relations Code, 2020)

3. சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 (Code on Social Security, 2020)

4. தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 (Occupational Safety, Health and Working Conditions Code, 2020)

இந்தச் சட்டங்கள் அனைத்தும் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் அறிக்கை

புதிய சட்டத் தொகுப்புகள் அமலானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கை குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"இன்று எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்குப் பெரிதும் அதிகாரம் அளிக்கும்.

இந்தச் சட்டங்கள் விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்குவதுடன், அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மேலும், “இந்தச் சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும், மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்.

இந்த விதிகள் சமூகப் பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் நமது உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும். அவை சிறந்த மற்றும் அதிக லாபகரமான வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம் சக ஊழியர்கள் இவற்றால் குறிப்பாகப் பயனடைவார்கள்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!