
டெல்லியில் செங்கோட்டை அருகே நவம்பர் 10ஆம் தேதி நடந்த பயங்கர குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் ஒருவரான முஸம்மில் ஷகீல் கனாய் (Muzammil Shakeel Ganaie), வெடிபொருட்களுக்கான இரசாயனங்களைத் தயாரிக்க மாவு அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த கனாய், ஃபரிதாபாத்தில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறையில் மாவு அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி யூரியாவை அரைத்து வெடிபொருட்களுக்கான இரசாயனங்களைத் தயாரித்துள்ளார்.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வீட்டில் இருந்து இந்த மாவு மில், கிரைண்டர் மற்றும் சில மின்னணு இயந்திரங்கள் மீட்கப்பட்டன. நவம்பர் 9 அன்று, கனாயின் வாடகை அறையிலிருந்து 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பிற வெடிபொருட்களை காவல்துறை கைப்பற்றியது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய மையமாக மாறியுள்ள ஃபரிதாபாத்தை தளமாகக் கொண்ட அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணிபுரியும் கனாய், யூரியாவிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டைப் பிரித்தெடுக்கவும், வெடிபொருட்களைச் சுத்திகரிக்கவும் நீண்ட காலமாக மாவு மில்லைப் பயன்படுத்தி வருவதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
முதலில், மாவு அரைக்கும் இயந்திரம், கிரைண்டர் போன்ற இயந்திரங்களை தனது சகோதரியின் திருமணத்திற்கான பரிசுகள் என்று கூறி, டாக்ஸி ஓட்டுநரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், அவற்றை தனது வாடகை வீட்டிற்கு மாற்றியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) குழு, டாக்ஸி ஓட்டுநரை விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகனுக்குச் சிகிச்சைக்காக அல்-ஃபலாஹ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கனாயைச் சந்தித்ததாக அந்த ஓட்டுநர் NIA-விடம் தெரிவித்துள்ளார்.
கனாய் மற்றும் அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது இரண்டு சகாக்கள் - ஷஹீன் சயீத் மற்றும் ஆதீல் அகமது ரத்தர் - ஆகியோரும் டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 10 அன்று, செங்கோட்டை அருகே உமர் உன் நபி என்ற காஷ்மீரி மருத்துவர் ஓட்டி வந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலை பயங்கரவாதி உமரும் அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.