பள்ளிக்கல்விக்கு புதிய பாடத்திட்டம்...... 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு...!

By manimegalai aFirst Published Sep 22, 2021, 1:25 PM IST
Highlights

புதிய தேசிய கல்விக்கொள்கையின்படி பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கையின்படி பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

புதிய தேசியக் கல்விக்கொள்கைக்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

கொரோனா பேரிடரால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் புதிய தேசிய கல்விக்கொள்கையை உடனடியாக அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக பள்ளிக்கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை இந்த குழு வடிவமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தா் நஜ்மா அக்தா், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தா் ஜக்பீா் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

புதிய கல்விக்கொள்கை பள்ளிகளிலேயே குலக்கல்வியை போதிக்கும் நடைமுறையை கொண்டுவரும் என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்தநிலையில் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளுமா அல்லது நீதிமன்றத்தை நாடி தடைபெறுமா என்ற கேள்விகளை கல்வியாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

click me!