விரைவில் வருகிறது ‘பிளாஸ்ட்டிக் ரூபாய் நோட்டுகள்’ - ‘கசங்காது’, ‘கிழியாது’, ‘அழுக்குப் படியாது’

First Published Dec 9, 2016, 3:47 PM IST
Highlights


நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, புழக்கத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, அதற்கான மூலப்பொருட்களையும் அரசு கொள்முதல் செய்துள்ளது என மத்தியஅரசுதெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறதா என மக்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் சிங் மேக்வால் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ நாட்டில் புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அல்ல பாலிமர் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன.

காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகப்படுத்த நீண்ட காலமாகவே ரிசர்வ்  வங்கி திட்டமிட்டுள்ளது.  கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ரூ.10 மதிப்பில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் எண்ணிக்கையில் அச்சடித்து வெளியிடப்படும். இந்த ரூபாய் நோட்டுகள் சோதனை முயற்சியாக கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் கரசன்சியின் சராசரி ஆயுள் காலம் 5ஆண்டுகளாகாகும். இதை கள்ளநோட்டுகளாக அச்சடிப்பது கடினமாகும். இதை கசக்க முடியாது, அழுக்குப்படியாமல் சுத்தமாக வைத்திருக்க முடியும். இதற்கு முன் இந்த நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது '' என்று தெரிவித்தார்.

click me!