
நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு, சில்லரைப் பற்றாக்குறையைப் போக்க புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகளை அச்சடித்து வெளியிடப்படும் எனரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் கவர்னர் உர்ஜித்படேல் கையெழுத்தும், நோட்டின் பின்புறம் ஆண்டின் விவரமும் இடம் பெற்று இருக்கும். அதேசமயம், பழைய 20, 50 ருபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8-ந்தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் வங்கிகளில் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருகின்றனர்.
ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம்,ரூ500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நோட்டுகளை மக்கள் ஏ.டி.எம்.கள், வங்கிகளில் இருந்து பெற்ற போதிலும், கடைகளில் சில்லரை கிடைக்காமல் பெரும் திண்டாடி வருகின்றனர்.
இதனால், வர்த்தகர்கள், சிறுவியாபாரிகள் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு சில்லரை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து, சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகளை அச்சிட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி நேற்றுத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
ரிசர்வ் வங்கி விரைவில் ரூ.50 நோட்டுகளை வெளியிட உள்ளது. அந்த ரூபாய் நோட்டுகளில் புதிய கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும், ஆண்டின் விவரமும் இடம் பெற்று இருக்கும். மேலும், ரூபாய் நோட்டுகளில் இருக்கும் எண்களுக்கு பக்கத்தில் எல் என்ற ஒரு குறியீடும் இடம் பெற்று இருக்கும்.
அதேபோல, ரூ.20 ரூபாய் நோட்டிலும், கவர்னர் உர்ஜித்படேல் கையெழுத்தும், எண்களுக்கு அருகே ‘எல்’ என்றும் இடம் பெற்று இருக்கும். தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களே இதிலும் இடம் பெறும்.
இந்த ரூபாய் நோட்டில் கூடுதல் அம்சமாக இடம் பெறும் ‘எல்’ என்ற எழுத்து எந்த அச்சகத்தில் இந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.