
புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே நேரம் பழைய ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ரூபாய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலே புழக்கத்தில் உள்ளதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய 100 ரூபாய் நோட்டில் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என்றும் அச்சிடப்படும் ஆண்டு 2016 என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும் புதிய ரூபாய் நோட்டில் பெரிய அளவிலான அடையாளக் குறியீடுகள் இருக்கும் என்று கூறியுள்ள ரிசர் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் வந்தாலும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
50 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.