
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இரண்டாது பெண் குழந்தை பிறந்தால், அந்த தாய்மார்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனும் புது நடைமுறை அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே முதல்பிரசவ கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. "பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் முதல் பிரசவ கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் 5,000 ரூபாய் உதவித் தொகை, மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை மத்திய அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறக்கும் பட்சத்தில் அந்த பெண்மணிகளுக்கும் இந்த சலுகைகளை வழங்க, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மத்திய அரசு திட்டமிட்டது. பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்கவும், பாலினத்தை அறியும் முயற்சியை கைவிடச் செய்யும் நோக்கில் இந்த சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்தார்.
எனவே, மத்திய அரசு திட்டத்தில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் சலுகை பெறும் நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக சொல்லபடுகிறது. அதன்படி 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த தாய்மார்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகையானது வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முன்னர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கான உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின் பெண்களுக்கு வழங்கப்படும் உதவிதொகை 2 தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் முழுத்தொகையும் பயனாளிக்கு குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் ஏழை பெண்களின் பிரவசக்கால செலவுகள் இந்த திட்டத்தின் மூல ஓரளவு பூர்த்தியடையும். மேலும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கர்ப்ப காலத்திலும், பெண்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லும் நிலையில் பரவலாக காண முடிகிறது. கூலி வேலைகளுக்கு செல்லும் பெண்கள் குழந்தை பெற்றெடுத்த பின்னரும், ஓய்வெடுக்க முடியாத நிலை உள்ளது. தினக்கூலி வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள், பேறுகாலத்தின் போது விடுமுறை எடுத்தால், அவர்களுக்கான ஊதியம் பிடிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டும், பெண்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது பெண்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.