தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குற்றம் செய்து வருகிறது அவர்களை நாடு மன்னிக்காது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்
தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் சமீபத்தில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையை விமர்சித்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குற்றம் செய்து வருகிறது எனவும், அவர்களை நாடு ஒருபோதும் மன்னிக்காது எனவும் சாடினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குற்றம் செய்து கொண்டிருக்கிறது. அவர்களை நாடு மன்னிக்காது. தேர்தல் நடக்கிறது, எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவினர், நாள் முழுவதும் சோதனை நடத்துகிறார்கள். பாஜகவினர் சுதந்திரமாக தேர்தலை சந்திக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.” என்றார்.
“ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமலாக்கத்துறையினர் ஏன் சோதனை செய்கிறார்கள்; அதில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன என்று இதுவரை தெரிவிக்கவில்லை. பாஜக மட்டுமே அதுகுறித்து பேசுகிறது. அமலாக்கத்துறையினரின் செய்தித் தொடர்பாளர்களாக பாஜகவினர் ஆகிவிட்டார்கள்.” என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, நாட்டில் தெருநய்களை விட இவர்கள் தான் அதிகமாக உலா வருகிறார்கள் என அமலாக்கத்துறையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரிப்பு!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதற்கிடையே, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வுத்தாள் கசிவு வழக்கில் பணமோசடி தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுயா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கோவிந்த் சிங் தோடஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் தீடீரென சோதனை நடத்தினர். மேலும், அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நடைபெற்ற இந்த சோதனைக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் அமலாக்கத்துறை சோதனையின் உள்நோக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சந்தேகம் தெரிவித்துள்ளார். உண்மையான ஆதாரங்கள் இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் குறி வைக்கப்படுவதாகவும், தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.