கடவுள் ராமர் அசைவம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது இதனால், ராமர் கோயிலை சுற்றியே விஷயங்கள் பெரிதளவு பேசப்பட்டு வருகிறது. பாஜக இதனை அரசியல் சார்ந்த மத விழவாக நடத்துவதாகவும், தேர்தல் அரசியலுக்கு இதனை உபயோகப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடவுள் ராமர் அசைவம் சாப்பிடுபவர் என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணியை சேர்ந்த ஜிதேந்திர அவாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல. சைவம் சாப்பிடுபவராக இருந்தால் அவர் 14 ஆண்டுகள் எப்படி காட்டில் வாழ்ந்திருப்பார் என கேள்வி எழுப்பினார். “ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அசைவ உணவு உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்.” எனவும் அவர் தெரிவித்தார்.
ஜிதேந்திர அவாத்தின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் ராம் கடம் என்பவர், ராம பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஜிதேந்திர அவாத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராம பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதே இந்தியா கூட்டணியினரின் மனநிலை என ராம் கடம் குற்றம் சாட்டியுள்ளார். ராமர் கோயில் கட்டப்பட்டது அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும், வாக்குகளுக்காக அவர்கள் இந்து மதத்தை கேலி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், இது போன்ற எதுவும் இந்து மத நூல்களில் எழுதப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ராமரை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசும் ஜிதேந்திர அவாத் ஒரு பொய்யர் எனவும் அவர் சாடியுள்ளார்.
ராகுலின் பாரத் நியாய யாத்திரை; மக்களவை தேர்தல் 2024: விவாதிக்கும் காங்கிரஸ்!
“என்சிபி தலைவர் ஜிதேந்திரா அவாத் பேசுவது முற்றிலும் தவறானது. வனவாசத்தின் போது ராமர் அசைவ உணவு உண்டதாக நமது சாஸ்திரங்களில் எங்கும் எழுதப்படவில்லை. பழங்கள் சாப்பிட்டதாக எழுதப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பொய்யருக்கு நமது ராமரை அவமதிக்க உரிமை இல்லை. எங்கள் கடவுள் எப்போதும் சைவ உணவு உண்பவர். நமது ராமரை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக அவர் பேசுகிறார்.” என சத்யேந்திர தாஸ் சாடியுள்ளார்.
அதேபோல், “ஜிதேந்திர அவாத்தின் கருத்து ராம பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ராமரைப் பற்றி தவறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜிதேந்திர அவாத்தை நான் கொன்று விடுவேன்.” என அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.