மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

Asianet News Tamil  
Published : Jan 31, 2017, 06:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

சுருக்கம்

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா. 70 வயதான இவர் காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார்.

சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

 

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார். 

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா.

அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா...' மனநிலை பாதிக்கப்பட்டவர்'.சதா... மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர்.

எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.  இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன.

சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன்  பயணிக்கிறது.

ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், 'மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்' என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும். 

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான்.

ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம்.

விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,'' பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா...? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர்.

அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்'' என்கிறார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?