
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார்.
சி.பி.எஸ்.இ. தேர்வுகள்
அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடக்கத்தில், சி.பி.எஸ்.சி. நடத்தி வரும் நுழைவுத் தேர்வுகளை மட்டும் இந்த முகமை நடத்தும். பிறகு, படிப்படியாக மற்ற நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும்.
‘நீட், நெட்’ தேர்வுகள்
தற்போது, மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வையும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்காக கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தேர்வையும் சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளை, இனிமேல், தேசிய தேர்வு முகமை நடத்தும். இதன் தலைவரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கும்.
ரூ.25 கோடி மானியம்
இந்த முகமைக்கு ஒரே நேர மானிய உதவியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கும். இதைக்கொண்டு, முகமை தனது முதல் வருட பணிகளை தொடங்கும். பிறகு தனது செலவுகளை தானே கவனித்துக்கொள்ளும்.
தன்னாட்சி அமைப்பான இந்த முகமை அமைக்கப்படுவதால், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி ஒதுக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நீதிபதிகள் ஊதியக் குழுவுக்கு ஒப்புதல்
கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய உயர்வு குறித்து பரிசீலிப்பதற்கான தேசிய இரண்டாவது நீதிபதிகள் ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நாட்டில் மொத்தம் 21,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து இந்தக் குழு பரிசீலிக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
இந்த ஊதியக் குழு 18 மாதங்களில் தனது பரிசீலனையை அளிக்கும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், பணியாளர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை கவனமாக ஆய்வு செய்து, ஊதிய உயர்வு குறித்த பரிந்துரையை இக்குழு அளிக்கும்.