பகையாளியான பங்காளிகள்... தேசிய அரசியலில் ஜெயிக்கப் போவது யாரு?

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 11:22 AM IST
Highlights

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் உள்ளடக்கிய மெகா அணி என்று திட்டம் போட்டு வருகிறார் தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கு தூபம் போட்டுவருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்ருமான சந்திரசேகர ராவ். ஒரே இடத்தில் அரசியல் படித்து, வளர்ந்த இவர்கள் தற்போது பங்காளிகளாக மாறியிருக்கிறார்கள்.

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் உள்ளடக்கிய மெகா அணி என்று திட்டம் போட்டு வருகிறார் தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கு தூபம் போட்டுவருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்ருமான சந்திரசேகர ராவ். ஒரே இடத்தில் அரசியல் படித்து, வளர்ந்த இவர்கள் தற்போது பங்காளிகளாக மாறியிருக்கிறார்கள். 

மறந்த முன்னாள் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவின் மகளை மணந்த பிறகு அவரது அரசியல் வாரிசாக உருவெடுத்தார் சந்திரபாபு நாயுடு. என்.டி. ராமாராவிடம் அரசியல் பாலப் பாடம் படித்து, பின்னாளில் தெலங்கானா பகுதியில் ஹீரோவானவர் சந்திர சேகர ராவ். ஒன்றுபட்ட ஆந்திராவில் தெற்கில் சந்திராபு நாயுடு என்றால், வடக்கில் சந்திர சேகர ராவ். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சந்திர சேகர ராவ் தொடங்கிய பிறகு இருவரும் துருவ அரசியல்வாதியானார்கள். 

ஆந்திரா பிரிந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு இடையேயான மோதல் பங்காளிச் சண்டையாக மாறிவிட்டது. சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணியில் சந்திர சேகர ராவ் இருக்கமாட்டார். சந்திரசேகர ராவ் இடம் பெறும் கூட்டணியை விட்டு சந்திரபாபு எப்போதும் தள்ளியே இருப்பார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்துவந்த சந்திரபாபு, தற்போது பாஜகாவுக்கு எதிராக காங்கிரஸோடு கைகோத்துள்ளார். தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று முனைப்பும் காட்டிவருகிறார். 

ஆனால், சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பாகவே காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை உருவாக்க திட்டமிட்டு, அதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய தலைவர்களைச் சந்தித்துவந்தார் சந்திரசேகர ராவ். ஆனால், திடீரென தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சந்திரசேகர ராவ் சென்ற பிறகு, தேசிய அரசியலை மூட்டைக் கட்டிவைத்தார். இந்த இடைவெளியில் உள்ளே நுழைந்த சந்திரபாபு, பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் கைகோத்தார். சந்திரசேகர ராவை போலவே சந்திர பாபுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்துவந்தார்.

தற்போது தெலங்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, மீண்டும் தேசிய அரசியல் பாதைக்கு திரும்பிவிட்டார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்ற கோஷத்தோடு மேற்குவங்க மம்தா பானர்ஜியையும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து ஆதரவுகோரினார் சந்திரசேகர ராவ். மேலும் பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கையை சந்திரபாபு சற்றும் ரசிக்கவில்லை. 

தன்னுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் சந்திரசேகர ராவை செயல்படுவதாக நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று எனக் கூறி மக்கள் நலக் கூட்டணி அமைந்ததைபோல, தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியை சந்திரசேகர ராவ் அமைக்க முயற்சிப்பதாக சந்திரபாபு நாயுடு கொந்தளித்துள்ளார். பாஜகவின் ‘பி’ டீம்தான் மூன்றாவது அணி என்று சொல்லாத குறையாக வருத்தெடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. 

அதற்கு ஏற்றார்போல நேற்று முன்தினம் மம்தா பானர்ஜியையும் நவீன் பட் நாயக்கையும் சந்தித்திவிட்டு, நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். இந்த இரு விஷயத்தையும் இணைத்து சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்துள்ளார் சந்திர பாபு நாயுடு. “எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. தெலங்கானா மாநில நலனுக்காக பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்தித்தாரா அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவதைப் பற்றி மோடியிடம் விளக்கினாரா?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. “பாஜக தலைமையில் ஒரு அணியும் காங்கிரஸ் தலைமையில் இன்னொரு அணியும் என இரு அணிகள் மட்டுமே இங்கே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ள சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவின் முயற்சி வெற்றி பெறாது என்றும் மறைமுகமாகச் சாடியுள்ளார். நாயுடு காருவும் ராவ் காரும் போட்டியில் யாருக்கு வெற்றி கிட்டும் என்பதுதான் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே கேள்வி!

click me!