
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்குதாரர்களாக இருக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு தடைவிதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
இதையடுத்து, பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணி சாமி தொடர்ந்த இந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை தொடங்கப்பட்டது. காலப்போக்கில் அந்த பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியது.
இதை சரிகட்ட அந்த பத்திரிகை நிர்வாகம் கடன் வாங்கியது. இந்த கடனை அடைக்க முடியாமல் அந்த பத்திரிகை தவித்த போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கட்சி நிதியில் இருந்து பணத்தை கொடுத்து கடனை அடைத்தனர்.
இதனிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ‘அசோசியேட்ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச்செயலாளர் ஆஸ்கர்பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012-ம் ஆண்டுவழக்கு தொடர்ந்தார்.
ஏறக்குறைய ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை ரூ.50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளை வைத்து இருக்கும் சோனியா காந்தி, ராகுல்காந்தியும் இந்த சொத்துக்களை முறைகேடாக வாங்கியுள்ளனர் என குற்றம் சாட்டினார். இந்த வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், வருமான வரித்துறை விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என யங்இந்தியா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது
இம்மனு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் சந்திரசேகர் ஆகியர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யங் இந்தியா நிறுவனம் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. ஆதலால், அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.