படகு விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதர்!

Published : May 26, 2025, 06:56 PM ISTUpdated : May 26, 2025, 09:55 PM IST
Odisha

சுருக்கம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா, பூரி கடற்கரையில் படகு சவாரி செய்தபோது விபத்துக்குள்ளானார்கள். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஒரு படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை மாலை பூரி கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா கங்குலி ஆகியோர் கடல் நீரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.

 

 

உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து அர்பிதா கங்குலி கூறுகையில், "கடவுளின் அருளால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கடல் சாகச விளையாட்டுகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

அர்ப்பிதா கங்குலி மேலும் கூறுகையில், "கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. 10 பேர் அமரக்கூடிய படகில், பண ஆசையில் வெறும் மூன்று அல்லது நான்கு பேரை மட்டுமே அனுமதித்திருந்தனர். இதனால் படகு எடை குறைவாக இருந்ததால், சமநிலை தவறி கவிழ்ந்துவிட்டது. லைஃப் கார்டுகள் விரைந்து வராதிருந்தால், நாங்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்" என்று வேதனை தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து பூரி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஒடிசா முதல்வருக்குப் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்வாசிகள், இந்தச் ஸ்பீட் படகு பயிற்சி இல்லாத ஊழியர்களால் இயக்கப்பட்டது என்றும், தனியார் சாகச நிறுவனம் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்து செயல்பட்டது என்றும் குற்றம் சாட்டினர். பூரி ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் புனித ஸ்தலமாகும். அங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தச் சம்பவம் கடலில் செய்யப்படும் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகள் வலுவாக இருக்கும் என்றும், இந்த வாரம் வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. மீனவர்கள் புதன்கிழமை முதல் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!