
மும்பை மழை - ரயில சேவை பாதிப்பு : மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொங்கண், மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், மும்பையில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த மூன்று நாட்களில் மும்பையிலும் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அம்பர்நாத் மற்றும் பத்லாப்பூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல இடங்களில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழையின் காரணமாக கர்ஜத், கோபோலி மற்றும் பத்லாப்பூரிலிருந்து மும்பை நோக்கிச் செல்லும் புறநகர் ரயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. அதேபோல், மும்பையிலிருந்து கல்யாண் மற்றும் கர்ஜத் நோக்கிச் செல்லும் புறநகர் ரயில்களும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், திங்கட்கிழமை காலை வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
அம்பர்நாத், பத்லாப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. சில இடங்களில் முழுவதுமாக இருள் சூழ்ந்துள்ளதால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இது தவிர, மும்பையின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், மத்திய ரயில்வே போக்குவரத்து மெதுவாக நடைபெறுகிறது. ரயில் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்களின் நேர அட்டவணை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை மும்பை, தானே, பால்கர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 29-ம் தேதிக்குப் பிறகு மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்புள்ளது.