வந்துவிட்டது விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி... அறிமுகம் செய்து வைத்தார் நரேந்திர சிங் தோமா்!!

By Narendran SFirst Published Jun 10, 2022, 9:47 PM IST
Highlights

கொரோனாவில் இருந்து விலங்குகளை காக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்து வைத்தார். 

கொரோனாவில் இருந்து விலங்குகளை காக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்து வைத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க பல தடுப்பூசிகள் மனிதர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனாவிற்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்தது. வல்லரசு நாடுகளில் கூட தட்டுப்பாடு நிலவிய நிலையில், இந்தியா தடுப்பூசிகளை சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக அனுப்பி வைத்தது. மேலும் உலக அளவில் குறைந்த விலையிலும் தடுப்பூசிகளை விற்பனை செய்தது. இதேபோல் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் அலையின் போது இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், தடுப்பூசி வந்த காரணத்தினால் இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் சற்று குறைந்தது.

அடுத்ததாக மூன்றாவது அலை வருவதற்குள் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உயிரிழப்பு கணிசமாக குறைந்தது. இவ்வாறு மனிதர்களை பாதுகாக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கியது. கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து விலங்குகளை காக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்து வைத்தார். ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், விலங்குகளுக்காக இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது, அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்புகளால், இறக்குமதி செய்வதை விட, சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது, இது உண்மையில் ஒரு பெரிய சாதனை என்றும் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.

click me!