
நாட்டின் 15ஆம் குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவதையடுத்து, அடுத்த குடியரசுத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, குடியரசுத்தலைவர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது, யார் யார் வாக்களிக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
எலக்டோரல் காலேஜ்
இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகின்றனர். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.
வாக்கு மதிப்பு
1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் MLA, MPயின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை MP, மக்களவை MPக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப MLAக்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.
உதாரணமாக, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு MALவின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றை விட அதிக மதிப்பை கொண்டதாக இருக்கும்.
இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பை கொண்டது உத்தரபிரதேச மாநிலத்தின் MLA பதவி. அங்கு ஒரு MALவின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு MLAவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184. அதே சமயம், நாட்டில் உள்ள ஏனைய MPக்களின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.
வாக்கு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
16ஆம் குடியரசு தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற MLAக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,231. MPக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,200. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் உள்ள மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431.
ஜூலை 18- ல் குடியரசுத் தலைவர் தேர்தல்... ஜூலை 21 ல் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவது யார்?
இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலை தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துவார். மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதி 7-ன்படி இந்த தேர்தல் இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகத்திலும் நடைபெறும்.
வாக்குசீட்டு முறை
இந்த தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும். MLAக்கள் அந்தந்த மாநில சட்டமன்ற வளாகத்திலும், MPக்கள் நாடாளுமன்ற வளாகத்திலும் அமைக்கப்படும் வாக்கு மையத்தில் வாக்களிக்க வேண்டும்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எங்கு எண்ணப்படும்?
தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் இடம்பெற்ற பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வோர் மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்களாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.