நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்களது பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைவதால், கூட்டணி கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக உள்ளாகியுள்ளது. கூட்டணி கட்சிகளும் சில முக்கியத்துறைகளை கேட்டு வந்ததால், கடந்த சில நாட்களாக அமைச்சரவை பட்டியலுக்கான பேச்சுவார்த்தையும் பரபரப்பாக நடந்து வந்தது.
மோடி 3.0 அமைச்சரவையின் மொத்த பலம் 78 முதல் 82 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் பிரதமர் மோடியுடன் சுமார் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிகிறது. உள்துறை, பாதுகாப்பு, வெளிவிவகார மற்றும் நிதித்துறை ஆகிய 4 முக்கியத்துறைகளை பாஜக தன் வசம் வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த துறைகளின் தற்போதைய அமைச்சர்களே மீண்டும் அந்த துறைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடந்த அமைச்சரவையில் இருந்த 10 அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு முக்கியத்துறைகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மோடி 3.0ல் இடம் பெறப்போகும் அமைச்சர்களது உத்தேச பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அர்ஜுன் மேக்வால், சிவ்ராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, எச்.டி.குமாரசாமி, சிராக் பாஸ்வான், ராம் நாத் தாக்கூர், ஜிதன் ராம் மஞ்சி, ஜெயந்த் சவுத்ரி, அனுப்ரியா படேல், ராம்மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மாசானி, பிரதாப் ராவ் ஜாதவ் (எஸ்எஸ்), லாலன் சிங், ராம்தாஸ் அத்தவாலே, மனோகர் கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கமல்ஜீத் செராவத், ரக்ஷா காட்சே, பூபேந்தர் யாதவ், ஜூவல் ஓரான், வீரேந்திர குமார், எஸ்பிஎஸ் பாகேல், எல் முருகன் ஆகியோர் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய எம்.பி.க்கள் ஒருத்தர் கூட இல்ல... பாஜக கூட்டணியின் லட்சணம் இதுதான்!
முன்னதாக, புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளோருக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து, புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமித் ஷா, ஜேபி நட்டா, பிஎல் வர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவராஜ் சிங் சவுகான், அன்னபூர்ணா தேவி, ஜோதிராதித்ய சிந்தியா, மனோகர் லால் கட்டார், ரக்ஷா கட்சே, நித்யானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா பகீரத் சவுத்ரி மற்றும் ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் பெயர் அமைச்சரவை பட்டியலில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் எல்.முருகன் மட்டுமே கலந்து கொண்டார். இதன் மூலம், எல்.முருகன் மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள். அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், அவர் மாநிலத் தலைவராக தொடர்வார் எனவும் கூறுகிறார்கள். அதேசமயம், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் எனவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல், கேரள மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகரும் பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். ஒருவேளை அவர் வெற்றி பெற்றிருந்தால் முக்கியத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இருப்பினும், மோடியின் கடந்த அமைச்சரவையில் அவர் முக்கிய பங்கு வகித்ததால், பரபரப்புகள் அடங்கிய பிறகு அவர் மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டு வரப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேசமயம், இந்த முறை போட்டிகள் அதிகமாக இருப்பதால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படவும் செய்யலாம் என கூறப்படுகிறது.