
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.ககளாக மத்திய அரசு நியமித்தது.
அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் இருக்கும்போது, ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தத பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் கிரண்பேடியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காரைக்கால் சென்றிருந்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியின் வளர்ச்சியைக் குறைக்க சிலர் முயன்று வருவதாக குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் நாற்காலியில் அமர முயற்சி செய்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எத்தனைபேர் உள்ளனர் என்றும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மூன்று பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையுடன் உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.