
உத்தரபிரதேசம் மாநிலத்தில், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் சடலத்தை ரிக்சாவில் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில், சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், சடலத்தைக் கொண்டு செல்ல, தோள்களிலும், இருசக்கர வண்டிகளிலும் கொண்டு செல்லப்படும் அவலம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவ உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. அதுவும், போலீசாரே ஆம்புலன்ஸ் கேட்டும் கிடைக்கவில்லை என்பது அவலமான விஷயம்.
உத்தரபிரதேசத்தில் அட்ரா ரயில் நிலையத்தையொட்டிய தண்டவாளத்தில் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயர் ராமசரே என்பதும், இது குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர், ராமசரேவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீசார் சில மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை கேட்டுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் தர மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், ராமசரேவின் உறவினர்கள் சடலத்தைப் பிரேதபரிசோதனை செய்வதற்காக ரிக்சாவில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு மருத்துவமனை ஒன்றில் ராமசரேவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த உடல்களை கொண்டு செல்ல உறவினர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காத நிலையில், போலீசாருக்கே ஆம்புலன்ஸ் வழங்கப்படாத இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.